காஷ்மீரில் 3 நாளில் 10 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் 3 நாளில் 10 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் மற்றும் அம்ரீனின் உறவினரான 10 வயது மருமகன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் அம்ரீன் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அம்ரீனின் உறவினரான சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுண்ட் கிராமத்திற்குள் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகளை, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றனர்.

இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று அவந்திபோரா பகுதியிலும் பயங்கரவாதிகள் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் படுகொலையில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதன்பின்பு அவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், அவர்கள் ஷாகித் முஷ்டாக் பட் மற்றும் பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் உத்தரவின் பேரில் அவர்கள் அம்ரீனை சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. கூறும்போது, தொலைக்காட்சி நடிகை அம்ரீன் கொலை வழக்கில் 24 மணிநேரத்தில் தீர்வு காணப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 3 ஜெய்ஷ் இ முகமது மற்றும் 7 லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் என 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story