184 பேர் போட்டியிட்ட நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் 10 பெண்கள் வெற்றி


184 பேர் போட்டியிட்ட நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் 10 பெண்கள் வெற்றி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் 184 பெண்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 10 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

பெங்களூரு:-

9 பெண்கள் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல்வேறு பெண்கள் அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பா.ஜனதா சார்பில் 12 பெண்களுக்கும், காங்கிரஸ் சார்பில் 11 பேருக்கும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 13 பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. அதாவது பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் 36 பெண்கள் போட்டியிட்டு இருந்தனர்.

இவர்களுடன், ஆம்ஆத்மி, ஜனார்த்தன ரெட்டி கட்சி, பிற சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என ஒட்டுமொத்தமாக 184 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 36 பேரில், 9 பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி தோல்வி அடைந்தார்.

சுயேச்சையாக போட்டியிட்டவரும்...

காங்கிரஸ் சார்பில் 4 பெண்களும், பா.ஜனதா சார்பில் 3 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 2 பெண்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி, காங்கிரஸ் கட்சியில் பெலகாவி புறநகரில்

லட்சுமி ஹெப்பால்கரும், மூடிகெரேயில் நயனா ஜோதி, கலபுரகி வடக்கு தொகுதியில் கனிஜா பாத்திமா, கோலார் தங்கவயலில் ரூபகலா ஆகிய 4 பேரும் வெற்றி பெற்றிருந்தனர். பா.ஜனதா சார்பில் நிப்பானியில் சசிகலா ஜோலே, பெங்களூரு மகாதேவபுராவில் மஞ்சுளா அரவிந்த் லிம்பாவளி, சுள்ளியா தொகுதியில் பகீரதி முருளியா வெற்றி பெற்றனர்.

ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் தேவதுர்காவில் கரேம்மா நாயக், சிவமொக்கா புறநகரில் சாரதா பூர்யாநாயக் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் சுயேச்சையாக பல்லாரி மாவட்டம் ஹரப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட லதா மல்லிகார்ஜுன் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 10 பெண்கள் சட்டசபைக்குள் காலெடுத்து வைக்க உள்ளனர்.


Next Story