ஒடிசா ரெயில் விபத்தில் 1,000 பேர் காயம்; தீவிர சிகிச்சையில் 100 பேர்... மத்திய மந்திரி மாண்டவியா தகவல்


ஒடிசா ரெயில் விபத்தில் 1,000 பேர் காயம்; தீவிர சிகிச்சையில் 100 பேர்... மத்திய மந்திரி மாண்டவியா தகவல்
x

ஒடிசா ரெயில் விபத்தில் சிகிச்சையில் 1,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்றும் 100-க்கும் கூடுதலானோருக்கு அவசரகால சிகிச்சை தேவையாக உள்ளது என மத்திய மந்திரி மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடியும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின்பு, தற்போது உள்ள சூழல் பற்றி பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி நவீன் பட்னாயக் தொலைபேசி வழியே இன்று காலை விளக்கி உள்ளார். இந்த நிலையில், மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சம்பவ பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்த கோர விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை நடந்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோருக்கு அவசரகால சிகிச்சை தேவையாக உள்ளது.

அவர்களுடைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை உள்ளிட்டவற்றில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை கொண்டு வரப்பட்டு உள்ளன.

நாங்கள் ஒரு விரிவான ஆலோசனை நடத்தி உள்ளோம். செயல் திட்ட பணி ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது என மந்திரி மாண்டவியா கூறியுள்ளார்.


Next Story