வீட்டில் பதுக்கிய ரூ.1.10 கோடி கள்ளநோட்டு, போலி வெளிநாட்டு பணம் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய ரூ.1.10 கோடி கள்ளநோட்டு, போலி வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:46 PM GMT)

பெங்களூரு ஹெண்ணூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.10 கோடி கள்ளநோட்டு, போலி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஹெண்ணூர்:

வீட்டில் சோதனை

பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடவும், போலி அமெரிக்க டாலர்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சோதனை நடத்த போலீசார் வருவது பற்றி முன்கூட்டியே அறிந்த 2 நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். பின்னர் போலீசார் நடத்திய சோதனையின் போது அந்த வீட்டில் கள்ளநோட்டுகள் மற்றும் போலி அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.1.10 கோடி மதிப்பு

அதாவது கள்ளநோட்டுகள் மற்றும் போலி அமெரிக்க டாலர்கள் என ஒட்டு மொத்தமாக அந்த வீட்டில் ரூ.1 கோடியே 10 லட்சம் இருந்தது. ரூ.51½ லட்சத்திற்கு 500 ரூபாய் கள்ளநோட்டுகளும், 100 முக மதிப்புடைய 708 போலி அமெரிக்க டாலர்களும், கள்ள நோட்டுகள், போலி அமெரிக்க டாலர்கள் தயாரிக்க பயன்படுத்திய பேப்பர்கள், பிரிண்டர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது.

தப்பி ஓடிய 2 நபர்கள் தான், அவற்றை தயாரித்து புழக்கத்தில் விட திட்டமிட்டு இருந்ததும் தெரிந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

அதாவது ரூ.1 லட்சம் கொடுப்பவர்களுக்கு, ரூ.2 லட்சத்திற்கு கள்ளநோட்டுகளையும், அதுபோன்று, பெங்களூருவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் அமெரிக்க டாலர்களை பெற்று போலி அமெரிக்க டாலர்களை கொடுத்து புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்துள்ளது. அமெரிக்க டாலர்களை மாற்ற, அந்த நாட்டை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார்களா?, இதற்கு பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவான 2 பேரையும் கைது செய்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் வெளியே வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story