உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.12 கோடி நகைகள், பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.12 கோடி நகைகள், பணம் பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:-
பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எஸ்.பி.ரோட்டில் பைகளுடன் சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த பைகளை சோதனை செய்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னார். அத்துடன் அந்த நகைகள், பணத்திற்கு உரிய எந்த ஆவணங்களும் அந்த வாலிபரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் வாலிபர் பெயர் கணேஷ் என்று தெரிந்தது.
அவரிடம் ரூ.90 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 800 கிராம் தங்க நகைகள், ரூ.22 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகை, பணத்தை அவர் எங்கு எடுத்து சென்றார்?, யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. அதுபற்றி கணேஷ் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் அளித்ததாலும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும் ரூ.1.12 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.