ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 19 March 2024 11:45 AM GMT (Updated: 19 March 2024 12:13 PM GMT)

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஜாபர் சாதிக்கிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும், டெல்லி போலீசாரும் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து போலீசார் நேற்று அதிகாலை விமானம் மூலம் ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென் மண்டல அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் அதிரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நடைபெற்றது.

ஜாபர் சாதிக் வைத்திருந்த 7 செல்போன்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து நீண்ட விசாரணை நடந்ததாகவும் தெரிகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாத்திக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டுள்ளார்.


Next Story