15 பேரின் வெற்றி, தோல்வி நிலவரம் என்ன?


15 பேரின் வெற்றி, தோல்வி நிலவரம் என்ன?
x

காநாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய 15 பேரின், தற்போதைய சட்டசபை தேர்தல் வெற்றி, தோல்வி நிலவரங்கள் என்ன? என்பதை இங்கு காண்போம்.

பெங்களூரு:-

15 பேர் ராஜினாமா

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார். அப்போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் இணைந்திருந்தனர்.

இதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்திருந்தது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த ரமேஷ் ஜார்கிகோளி, சுதாகர், சோமசேகர், ஆனந்த்சிங், முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், பி.சி.பட்டீல், மகேஷ் குமட்டள்ளி, ஸ்ரீமந்த் பட்டீல், பிரதாப் கவுடாபட்டீல், கோபாலய்யா, பைரதி பசவராஜ், சிவராம் ஹெப்பார், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்த எச்.விஸ்வநாத், நாராயணகவுடா ஆகிய 15 பேர் ஆவார்கள். அதன்பிறகு, நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் தவிர்த்து, மற்றவர்கள் வெற்றி பெற்று மந்திரிகளாகவும் ஆகி இருந்தனர்.

நாராயணகவுடா தோல்வி

இந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் அனைவரும் போட்டியிட பா.ஜனதா சார்பில் சீட் வழங்கப்பட்டு இருந்தது. எம்.எல்.சி.யாக இருக்கும் விஸ்வநாத் காங்கிரசில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த முறை பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அதன்படி, சிக்பள்ளாப்பூர் தொகுதியில் சுதாகரும், ஒசக்கோட்டை தொகுதியில் எம்.டி.பி.நாகராஜும், கே.ஆர்.பேட்டை தொகுதியில் நாராயணகவுடாவும் தோல்வியை தழுவி உள்ளனர். காகவாட் தொகுதியில் ஸ்ரீமந்த்பட்டீல், அதானி தொகுதியில் மகேஷ் குமட்டள்ளி, ஹிரேகெரூர் தொகுதியில் பி.சி.பட்டீல், மஸ்கியில் பிரதாப் கவுடா பட்டீல் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

6 பேர் வெற்றி

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் முனிரத்னா, யஷ்வந்தபுரத்தில் சோமசேகர், கே.ஆர்.புரத்தில் பைரதி பசவராஜ், மகாலட்சுமி லே-அவுட்டில் கோபாலய்யா எல்லாப்பூரில் சிவராம் ஹெப்பால், கோகாக்கில் ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 6 பேர் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனந்த்சிங்குக்கு பதிலாக அவரது மகன் சித்தார்த் சிங் போட்டியிட்ட விஜயநகர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு, கட்சி தாவியவர்களுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.


Next Story