சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்


சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா அருகே சிறுத்ைத தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண நிதி வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

சிவமொக்கா:-

வனப்பகுதி

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா பிக்கோனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்தநிலையில், பிக்கோனஹள்ளி கிராமத்தை சோ்ந்தவர் யசோதம்மா (வயது 40). இவருக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்தநிலையில் யசோதம்மா கடந்த 8-ந்தேதி தோட்டத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று விளை நிலத்திற்குள் புகுந்து யசோதம்மா மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவரது பாதி உடலை சிறுத்தை தின்று விட்டு சாலையோரம் பாதி உடலை போட்டு விட்டு சென்றது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், சிவமொக்கா புறநகர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் யசோதம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிராம மக்கள் கோரிக்கை

முன்னதாக கிராம மக்கள் திரண்டு வந்து வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கோரியும், சிறுத்தை தாக்கி உயிரிழந்த யசோதம்மாவின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சிறுத்தை தாக்கி உயிரிழந்த யசோதம்மாவின் வீட்டிற்கு சிவமொக்கா புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. சாரதா பூரியா நாயக் சென்றார். அங்கு யசோதம்மாவின் உடலுக்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வனத்துறை சார்பில் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை யசோதம்மாவின் குடும்பத்தினருக்கு சாரதா பூரியா நாயக் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கேமராக்கள் பொருத்தம்

இந்தநிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பிக்கோனஹள்ளி கிராமத்தில் 3 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


Next Story