அரபி கடலில் ரூ.1,526 கோடி மதிப்புடைய ஹெராயின் கடத்தல்
அரபி கடலில் படகுகளில் கடத்திய ரூ.1,526 கோடி மதிப்புடைய ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
கொச்சி,
இந்திய கடலோர காவல் படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இணைந்து அவ்வப்போது கூட்டு நடவடிக்கையாக கடத்தல் கும்பலை தேடும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி கடந்த 7ந்தேதி ஆபரேசன் கோஜ்பீன் என்ற பெயரில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த பணியில், கடலோர காவல் படையை சேர்ந்த சுஜீத் என்ற கப்பல் ஈடுபட்டது. அதில், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நீண்ட நாட்களாக மேற்கொண்ட இந்த தேடுதல் வேட்டையின் பயனாக, சந்தேகத்திற்குரிய வகையில் பிரின்ஸ் மற்றும் லிட்டில் ஜீசஸ் ஆகிய பெயர்களை கொண்ட 2 படகுகள் அரபி கடலில் பயணித்தன. அவை இந்தியாவை நோக்கி வந்தன.
இதனை கவனித்த அதிகாரிகள், படகை நெருங்கி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில், படகுகளில் அதிக அளவில் போதை பொருள் மறைத்து வைத்து, கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 படகுகளும் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் தலா 1 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் 218 பொட்டலங்கள் இருந்துள்ளன. உயர்வகை ஹெராயினான அவற்றின் சர்வதேச மதிப்பு கள்ளச்சந்தையில் ரூ.1,526 கோடி என்ற அளவில் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.