பயோடெக்-கிசான் திட்டத்தில் 1.60 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர்- மத்திய மந்திரி தகவல்
‘பயோடெக்-கிசான்’என்கிற உயிரி தொழில்நுட்ப வேளாண் திட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:-
கடந்த 2022-2023-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 'பயோடெக்-கிசான்' என்கிற உயிரி தொழில்நுட்ப வேளாண் திட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர்.
நீர்ப்பாசனம், விளைநிலம், விதைகள், விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தி தீர்வு காண்பதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் விதைகளின் தரத்தை மேம்படுத்துதல், காய்கறிகளை தானியக் கிடங்கில் சேகரித்தல், உயிரி-உரம் உதவியுடன் சாகுபடி செய்தல், பாசனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு மற்றும் மீன் பண்ணைகளை அமைப்பதுடன் அவற்றை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.