பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.170 கோடி வழங்க வேண்டும்; ஐ.டி.ஐ. பொதுத்துறை நிறுவனத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.170 கோடி வழங்க வேண்டும்; ஐ.டி.ஐ. பொதுத்துறை நிறுவனத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.170 கோடி வழங்கும்படி ஐ.டி.ஐ. நிறுவனத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

குறைந்த கட்டணம்

பி.எஸ்.என்.எல். சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு அடுத்த தலைமுறைக்கான இணைய தொடர்பு கருவியை வாங்க டெண்டருக்கு அழைப்பு விடுத்தது. இதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.ஐ. நிறுவனமும் கலந்து கொண்டது. குறைந்த கட்டணத்திற்கு டெண்டரை கோரியதில் அந்த நிறுவனம் 3-வது இடத்தில் இருந்தது. ஆனாலும் இட ஒதுக்கீட்டின்படி ஐ.டி.ஐ. நிறுவனத்திற்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு அந்த ஐ.டி.ஐ. நிறுவனத்துடன் அமெரிக்காவை சேர்ந்த ஆல்பியான் நிறுவனம் இணைந்து செயல்பட ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி மொத்த திட்ட தொகையில் 34.30 சதவீதத்தை தங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு ஐ.டி.ஐ. நிறுவனத்திடம் ஆல்பியான் நிறுவனம் கேட்டது. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொகையை பட்டுவாடா செய்யாததால் அந்த தொகையை வழங்க ஐ.டி.ஐ. நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து அந்த ஆல்பியான் நிறுவனம், மத்தியஸ்தரை (ஆர்பிட்ரேஷன்) அணுகியது.

மனு தள்ளுபடி

இதுகுறித்து விசாரணை நடத்திய மத்தியஸ்தர், அந்த அமெரிக்க நிறுவனமான ஆல்பியானுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.170 கோடி வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஐ.டி.ஐ. நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், மத்தியஸ்தர் வழங்கிய உத்தரவு செல்லும் என்று கூறி ஐ.டி.ஐ. நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.170 கோடி வழங்கும்படி ஐ.டி.ஐ. நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும் இது ஒரு தீவிரம் அல்லாத முட்டாள்தனமான வழக்கு என்பதால், ஐ.டி.ஐ. நிறுவனத்திற்கு வழக்கு செலவு ரூ.5 லட்சம் செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் புறவாசல் வழியாக நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Next Story