178 எக்டேர் விவசாய பயிர்கள் நாசம்


178 எக்டேர் விவசாய பயிர்கள் நாசம்
x

சிக்பள்ளாப்பூரில் பெய்த பல மழையால் 178 எக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

கோலார் தங்கயவல்:-

பலத்த மழை

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து வீடுகளுக்குள் நிரம்பியது. இதனால் உடமைகள் அனைத்து மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த மழையால் பொதுமக்களால் வீடுகளில் இருக்க முடியவில்லை. இதனால் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு, அரசு பள்ளி கூடங்களிலும் சென்று தஞ்சமடைந்தனர். மேலும் சாக்கடை நீருடன், மழை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.

இது தவிர ஏராளமான இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் பல இடங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. இதேபோல பலத்த மழையால் விவசாய நிலத்திற்குள் மழை நீர் புகுந்தது. இந்த மழையால் விளை நிலத்தில் பயிரிட்டிருந்த தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், பீன்ஸ், மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி நாசமானது. சுமார் 178 எக்டேர் விவசாய பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

பூக்கள் சாகுபடி பாதிப்பு

இது தவிர சில இடங்களில் பூச்செடிகள் மழை நீரில் மூழ்கியது. இதனால் 100 எக்டேர் பரப்பளவில் போடப்பட்டிருந்தது சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பல லட்சம் வரை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள விவசாயிகள், உடனே தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்ற தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story