தார்வாரில் 2 நாட்களில் 198 வீடுகள் இடிந்தன கலெக்டர் தகவல்


தார்வாரில் 2 நாட்களில் 198 வீடுகள் இடிந்தன கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

தொடர் கனமழையால் தார்வார் மாவட்டத்தில் 2 நாட்களில் 198 வீடுகள் இடிந்துள்ளன என்று கலெக்டர் குருதத்த ஹெக்டே தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி-

தொடர் கனமழையால் தார்வார் மாவட்டத்தில் 2 நாட்களில் 198 வீடுகள் இடிந்துள்ளன என்று கலெக்டர் குருதத்த ஹெக்டே தெரிவித்துள்ளார்.

கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகர்நாடக மாவட்டமான தார்வாரிலும் கடந்த 2 வாரங்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்ததுடன், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன. இந்த தொடர் கனமழையால் தார்வாரில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தார்வார் மாவட்டத்தில் மழை-வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் குருதத்த ஹெக்டே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, கலெக்டா் குருதத்த ஹெக்டேவிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதுபற்றி கலெக்டர் குருதத்த ஹெக்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

198 வீடுகள் இடிந்தன

தார்வார் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அதாவது 26-ந்தேதி காலை 8 மணி முதல் 27-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலை 6 மணி வரை மொத்தம் 198 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தார்வார் தாலுகாவில் 87 வீடுகளும், கல்கட்டகியில் 45, குந்துகோலில் 26, உப்பள்ளியில் 18, நவலகுந்துவில் 10, அன்னிகேரியில் 8, அல்னாவரில் 4 வீடுகளும் இடிந்துள்ளன.

கனமழையால் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து நேற்று (நேற்று முன்தினம்) வரை மொத்தம் 677 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 15 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story