சீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சி.பி.ஐ. தாக்கல்


சீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சி.பி.ஐ. தாக்கல்
x

சீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது.

இதில் டெல்லி ஆசாத் மார்க்கெட் அருகே உள்ள புல் பங்காஷ் குருத்வாராவை தீ வைத்து எரித்து தாகுர் சிங், பாதல் சிங், குருசரண் சிங் ஆகிய 3 சீக்கியர்களை உயிருடன் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெகதீஷ் டைட்லர் மீது கடந்த 2005-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதால் கலவர கும்பல் கடைகளுக்கு தீயிட்டு அவற்றிலிருந்த பொருள்களை திருடியதுடன் 3 சீக்கியர்களையும் உயிருடன் எரித்து கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


Next Story