முதல் நாள் பழையது, 2-ம் நாளில் இருந்து புதியது - சிறப்பு கூட்டத்தோடு தொடங்குகிறது புதிய நாடாளுமன்றம்


முதல் நாள் பழையது, 2-ம் நாளில் இருந்து புதியது - சிறப்பு கூட்டத்தோடு தொடங்குகிறது புதிய நாடாளுமன்றம்
x

புதிய நாடாளுமன்றத்தின் செயல்பாடு, சிறப்பு கூட்டத்தோடு தொடங்குகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த கூட்டத்தொடரான குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் தொடங்கும்.

இந்த நிலையில் திடீரென 5 நாள் சிறப்பு கூட்டம் நடைபெற இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அறிவித்தார். இதன்படி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆனால் கூட்டம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

அதே நேரத்தில் இந்த சிறப்பு கூட்டம் வழக்கமான அமர்வு இல்லை என்பதால், கேள்விநேரம் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட அலுவல்கள் இல்லாமல் நடைபெறும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தெளிவுப்படுத்தி இருந்தன.

இதற்கிடையே கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுமா? அல்லது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்த தேடலில், முதல்நாள் கூட்டம் பழைய கட்டிடத்தில் நடைபெறும் என்றும், அடுத்தநாள் டெல்லி விநாயகர் சதுர்த்தியையொட்டி புதிய கட்டிடத்துக்கு கூட்டம் மாற்றப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பழைய கட்டிடத்தில் 18-ந் தேதி கூட்டம் தொடங்கும் நாளில் உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார். இங்கு மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 300 இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் சிறப்பு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு கூட்டத்தோடு புதிய நாடாளுமன்றம் தொடங்குகிறது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு கூட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு நாடாளுமன்றத்தை ஒட்டிய செஞ்சிலுவை சங்க சாலை வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.


Next Story