கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற 2 பேர் கைது
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி-
உப்பள்ளியில், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி ஒருவர் பலியானார். அவரை நண்பர்களே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் காமனகட்டி கிராமம் அருகே கரியம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே அனுமந்தப்பா பக்கீரப்பா மேதார்(வயது 29) என்பவர் வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானார். வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து பக்கீரப்பாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தனிமையில் சந்தித்து உல்லாசம்
இந்த கொலை சம்பவம் குறித்து உப்பள்ளி ஏ.பி.எம்.சி. நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் பக்கீரப்பாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த சித்தய்யா மற்றும் பிரபு ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதாவது சித்தய்யா, பிரபு, பக்கீரப்பா ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் சித்தய்யாவின் மனைவியுடன் பக்கீரப்பாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி அறிந்த சித்தய்யா, பக்கீரப்பாவையும், தனது மனைவியையும் கண்டித்தார். ஆனால் இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
நண்பர்கள் 2 பேர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த சித்தய்யா, தனது நண்பன் பிரபுவுடன் சேர்ந்து பக்கீரப்பாவை படுகொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்தய்யா மற்றும் பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.