பத்ராவதியில் வீடு, கோவில்களில் திருடிய பெண் உள்பட 2 பேர் பிடிபட்டனர்; ரூ.10¼ லட்சம் நகைகள் மீட்பு
பத்ராவதியில் வீடு, கோவில்களில் திருடிய பெண் உள்பட 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10¼ லட்சம் நகைகள் மீட்கப்பட்டது.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புறநகர் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பத்ராவதி தாலுகா ஒசமனே பகுதியை சேர்ந்த ராஜ்(வயது 37), சிவமொக்கா தாலுகா ஒசஹள்ளியை சேர்ந்த ஸ்வேதா(32) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் 2 பேரும் பத்ராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கோவில்களில் இரவு நேரத்தில் புகுந்து நகை, பணத்தை திருடி வந்துள்ளனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி பத்ராவதி தாலுகா குமரி நாராயணபுரா கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் மீது பத்ராவதி புறநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பேப்பர் டவுன், ஒலேஒன்னூர் போலீஸ் நிலையத்தில் தலா 2 திருட்டு வழக்குகளும் உள்ளன. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 220 கிராம் தங்கநகைகள், 132 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.10¼ லட்சம் ஆகும். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.