தொடர் அட்டகாசம் செய்த 2 கரடிகள் பிடிபட்டன


தொடர் அட்டகாசம் செய்த 2 கரடிகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:46 PM GMT)

ஒசதுர்காவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த 2 கரடிகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

சிக்கமகளூரு:

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா அருகே கவுசியாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கவுசியாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 கரடிகள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. மேலும் கிராம மக்களையும் அந்த கரடிகள் அச்சுறுத்தி வந்தன. இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.

மேலும் இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், கவுசியாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரும்பு கூண்டுகளை வைத்து கரடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் அந்த கூண்டுகளுக்குள் கரடி சிக்கவில்லை.

இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை பிடிக்க பெங்களூருவில் இருந்து சிறப்பு படையினர் ஒசதுர்காவுக்கு வந்தனர். அவர்கள் தொடர் அட்டகாசம் செய்து வந்த கரடியை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுசியாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு கரடியை வனத்துறையினர் மற்றும் சிறப்பு படையினர் வலையை விரித்து பிடித்து கூண்டில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சன்னசமுத்திரா பகுதியில் மற்றொரு கரடி சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து, வலையை விரித்து அந்த கரடியையும் பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த கரடியை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

கவுசியாநகர், சன்னசமுத்திரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 4 கரடிகளில் 2 கரடிகளை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். மேலும் 2 கரடிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளை வெளியே விடவேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story