பீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்


பீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
x

கள்ளச்சாராயம் அருந்தியதால் 15க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர்.

பாட்னா,

பீகாரில் சாப்ரா மாவட்டத்தில் உள்ள நோனியா தோலா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மத நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை அருந்தியுள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் அருந்திய இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதன் பக்கவிளைவாக, கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராமானந்த் மஞ்சி, சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ளார். நோனியா தோலா கிராமத்தில் மஞ்சி என்பவர் கள்ள மதுபான ஆலையில் சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர்களிடம் இருந்து 1,450 லிட்டர் சாராயம் மற்றும் ஸ்பிரிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதை வாங்கிக் குடித்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர்.தற்போது, சாப்ரா மற்றும் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளில் 35 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில், அப்பகுதி காவல் எல்லைக்குட்பட்ட அதிகாரிகள் மீது நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கவனமுடன் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இச்சம்பவம் நடைபெற்று இருக்காது. அவர்களுடைய கவனக்குறைவு காரணமாக, இத்தனை பேர் உயிரிழக்க காரணமாக அமைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் தொடர்புடைய 94 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேநேரம் இந்த இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் குழு பனன்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, மது கடத்தல்காரர்களை பிடிக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ராஜேஷ் மீனா கூறியுள்ளார்.

சரண் சரக எஸ்.பி சந்தோஷ் குமார் கூறுகையில், "ஆகஸ்ட் 2, 2022 அன்று நாக பஞ்சமி கொண்டாட்டத்தின் போது கிராமத்தில் சிலர் மது அருந்தினர். மர்ஹவுரா மற்றும் சோன்பூர் டிஎஸ்பிகள் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைகள் காத்திருக்கிறோம்" என்றார்.

ஏப்ரல் 2016 முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போதிலும், இந்த ஆண்டில் மட்டும் பீகாரில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவம் இதுவாகும்.


Next Story