வாக்காளர்கள் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது; மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு


வாக்காளர்கள் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது; மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

வாக்காளர்களின் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

2 பேர் கைது

பெங்களூரு மாநகராட்சி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் தொடர்பான பணிகளை சிலுமே என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனம் காங்கிரசுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி இணை கமிஷனர் ரங்கப்பா அளித்த புகாரின்பேரில் அல்சூர்கேட், காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மல்லேசுவரத்தில் உள்ள சிலுமே நிறுவனத்தில் அல்சூர்கேட் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது மடிக்கணினிகள், கணினிகள், ஆவணங்கள் சிக்கி இருந்தன. மேலும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தர்மேஷ், ரக்‌ஷித், ராகவேந்திரா உள்பட 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மந்திரி பெயரிலான காசோலை

இந்த வழக்கில் செலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார், அவரது சகோதரர் கெம்பேகவுடா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே கல்லநாயக்கனஹள்ளியில் உள்ள ரவிக்குமாரின் வீடு, மல்லேசுவரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்து மந்திரி பெயரிலான காசோலை, சில முக்கிய ஆவணங்கள் போலீசாருக்கு சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்று உள்ளனர். மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமாரின் மனைவியும், செலுமே நிறுவன இயக்குனருமான ஐஸ்வர்யாவுக்கு விசாரணைக்கு ஆஜராக அல்சூர்கேட் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அவர் நேற்று மாலை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்று கொண்டனர்.


Next Story