இளம் விவசாயிகளை திருமணம் செய்யும் இளம்பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவி; ஜனதாதளம்(எஸ்) தேர்தல் அறிக்கை வெளியீடு
இளம்விவசாயிகளை திருமணம் செய்யும் இளம்பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், வீடுகளுக்கு ஆண்டுக்கு 5 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்பட 12 முக்கிய அறிவிப்புகளை ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
பெங்களூரு:
தேர்தல் அறிக்கை வெளியீடு
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 123 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராகி வருகிறது. இதற்காக பஞ்சரத்னா யாத்திரை மூலமாக மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 முக்கிய அறிவிப்புகளுடன் தேர்தல் உத்தரவாத பத்திரம் என்னும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
5 கியாஸ் சிலிண்டர்கள்
அதன்படி, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விவசாயிகளின் குடும்பத்திற்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசக்தி சங்கங்களில் மக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணிகளுக்கு 6 மாதம், ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
விதவைகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.900-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம். அங்கன்வாடியில் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் வேலை செய்திருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
விவசாய வாலிபர்களை திருமணம்...
தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் கன்னட மொழியில் எழுதுவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளின் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
விவசாயத்தில் ஈடுபடும் வாலிபர்களை திருமணம் செய்யும் இளம்பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். முதியவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். தொடக்க பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.
மின்சார ஸ்கூட்டர்
கல்லூரியில் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 60 ஆயிரம் மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு முதல்-மந்திரியின் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி உதவி. இந்த உதவி தொகை 24 மணி நேரத்திற்குள் பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்திற்கு ஒரு ஜெயதேவா போன்ற பன்நோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும். மாநிலத்தில் நிமான்ஸ் போன்று 500 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனபன உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.