கேரளா: போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை - 2 மாவோயிஸ்டுகள் கைது
வனப்பகுதியில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
திருவனந்தபுரம்,
சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், பீகார், மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மாவோயிஸ்டுகளை ஒழிக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேவேளை, கேரளா, தமிழ்நாடு வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தலப்புலாவில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சிறப்பு கமண்டோ படையினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீது போலீசார் பதில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இறுதியில் 3 மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற நிலையில் சந்துரு, உன்னியம்மா ஆகிய 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள வீட்டிற்கு செல்போன் சார்ஜ் செய்ய 5 மாவோயிஸ்டுகள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய 3 மாவோயிஸ்டுகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.