"தவறான செயல்களை பாஜக செய்யச் சொன்னால் போலீசார் மறுக்க வேண்டும்"- கெஜ்ரிவால் வேண்டுகோள்


தவறான செயல்களை பாஜக செய்யச் சொன்னால் போலீசார் மறுக்க வேண்டும்- கெஜ்ரிவால் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Sept 2022 4:35 PM IST (Updated: 13 Sept 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவினர் தவறான செயல்களைச் செய்யச் சொன்னால் மறுத்துவிடுங்கள் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் குஜராத்துக்கு நேற்றும், இன்றும் என 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி அவர் நேற்று குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு சென்ற அவர், ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிய கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசி முடித்ததும், விக்ரம் தந்தானி என்ற கத்லோடியா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டுக்கு சாப்பிட வரும்படி கெஜ்ரிவாலிடம் கோரினார்.

இதன்படி, இரவு 7.30 மணியளவில் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கெஜ்ரிவால் கிளம்பி, விக்ரமின் ஆட்டோவில் பயணித்து, அவரது வீட்டுக்கு புறப்பட்டார். எனினும், கெஜ்ரிவாலை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, சிறிது நேரம் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின்னர், ஆட்டோ ஓட்டுனருக்கு பின்னால் காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்து கொண்டார். அவர்களது ஆட்டோவை காவல் துறையின் 2 கார்கள் பாதுகாப்புக்காக உடன் பின் தொடர்ந்து சென்றன. இதனால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தவறான செயல்களைச் செய்ய வலியுறுத்தும் பாஜகவின் உத்தரவை மறுக்குமாறு குஜராத் போலீசாருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்," குஜராத் போலீசாருக்கு எனது வேண்டுகோள். தர ஊதியம் போன்ற பல விஷயங்களிலும் நான் உங்களுக்கு ஆதரவளித்துள்ளேன். குஜராத்தில் ஆட்சி அமைத்த பிறகு அதை அமல்படுத்துவோம்.

நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பாஜகவில் இருப்பவர்கள் தவறான செயல்களைச் செய்யச் சொன்னால், மறுத்துவிடுங்கள். பாஜக வெளியேறிவிடும். ஆம் ஆத்மி ஆட்சி அமையும்" என தெரிவித்துள்ளார்.


Next Story