2% விமான பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை; யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு உத்தரவு


2% விமான பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை; யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2022 7:12 AM IST (Updated: 30 Jun 2022 7:26 AM IST)
t-max-icont-min-icon

யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் ஒவ்வொரு விமானத்தின் 2% பயணிகளிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளது.



புதுடெல்லி,



இந்தியாவில் நாள்தோறும் சமீப நாட்களாக 10 ஆயிரத்திற்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதனை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசால் கடந்த 9ந்தேதி வெளியிடப்பட்ட, கொரோனாவுக்கு எதிரான திருத்தியமைக்கப்பட்ட கண்காணிப்பு திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு, இதனை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இதன்படி சந்தேகத்திற்கு உரிய மற்றும் உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளை கொண்டவர்களை முன்பே மற்றும் சரியான நேரத்தில் கண்டறியவும் முடியும். புதிய கொரோனா வகை பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.

இதுவரையுள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்துடன், நீண்டகால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொரோனா கண்காணிப்பினையும் ஒருங்கிணைப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவுக்கு வருகிற சர்வதேச விமான பயணிகளிடம், ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதில் கொரோனா பாதித்த மாதிரிகள் அனைத்தும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அந்த பயணிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தி மற்றும் மருத்துவ ரீதியாக அவர்களை கண்காணிக்கவும் வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளின்படி பின்பற்ற அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதேபோன்று, அனைத்து சுகாதார வசதி மையங்களும், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவற்றை ஆய்வு செய்வதில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் பொறுப்பாவார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த காய்ச்சல் போன்ற பாதிப்புகளை கொண்டவர்களில் 5 சதவீதத்தினரிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளையும் நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், கடுமையான சுவாச பாதிப்பு கொண்டவர்களை பற்றி கண்காணிப்பதற்கான பணிகளை சுகாதார மையங்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களிடமும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த வேண்டும். இந்த கொரோனா ஆய்வக பரிசோதனை முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story