கோவில் நில விவகாரத்தில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை - ஜனதாதளம் (எஸ்) பிரமுகருக்கு வலைவீச்சு


கோவில் நில விவகாரத்தில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை - ஜனதாதளம் (எஸ்) பிரமுகருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

துமகூரு அருகே கோவில் நில விவகாரத்தில் பெண் உள்பட 2 பேர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஜனதாதளம் (எஸ்) கட்சி பிரமுகரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

2 பேர் கொலை

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா மீடிகேசி கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா (வயது 38). அதே பகுதியில் வசித்து வந்தவர் ராம ஆஞ்சனேயா (48). நேற்று முன்தினம் ஷில்பா வீட்டில் இருந்து ராம ஆஞ்சனேயா, மல்லிகார்ஜுன் உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஷில்பா உள்ளிட்ட 3 பேரையும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

இதில், 3 பேரும் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அந்த கும்பலினர் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். உயிருக்கு போராடிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஷில்பா, ராம ஆஞ்சனேயா இறந்து விட்டார்கள். மல்லிகார்ஜுனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில் நில விவகாரத்தில் பயங்கரம்

தகவல் அறிந்ததும் மதுகிரி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஜனதாதளம் (எஸ்) பிரமுகரான ஸ்ரீதர் குப்தா அபகரிக்க முயற்சித்துள்ளார். இதனை எதிர்த்து ஷில்பா, ராம ஆஞ்சனேயா மற்றும் கிராம மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷில்பாவுக்கு ஆதரவாகவும், கிராம மக்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு கூறி இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் குப்தா தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஷில்பா உள்பட 2 பேரையும் கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் குப்தா உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story