கழுகை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கிய 2 பேர் உயிரிழப்பு


கழுகை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கிய 2 பேர் உயிரிழப்பு
x

மராட்டியத்தில் கழுகை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.பந்திரா,மராட்டியத்தின் பந்திரா-ஒர்லி பகுதி வழியே அமர் மணீஷ் ஜாரிவாலா (வயது 43) என்பவர் மலாட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த காரை ஓட்டுனர் ஷியாம் சுந்தர் காமத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இதில் செல்லும் வழியில், அந்த காருக்கு அடியில் கழுகு ஒன்று திடீரென சிக்கி கொண்டது. இதனை கவனித்த ஜாரிவாலா காரை நிறுத்தும்படி ஓட்டுனர் ஷியாமிடம் கூறியுள்ளார். அவரும் காரை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் பரபரப்பு நிறைந்த அந்த சாலையில், இருவரும் காரை விட்டு கீழே இறங்கி காருக்கு அடியில் இருந்த கழுகை மீட்க முயற்சித்து உள்ளனர்.

ஆனால், அவர்களை அடுத்து வந்த டாக்சி ஒன்று விரைவாக அவர்கள் மீது மோதி விட்டு சென்றுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஜாரிவாலா சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து விட்டார். ஷியாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய டாக்சி ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story