மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எலகங்கா:
பெங்களூரு எலகங்கா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது சந்தேப்படும்படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தேவரஜீவனஹள்ளியை சேர்ந்த யாசின் பேக் (வயது 22), இம்ரான் கான் (24) என்று தெரிந்தது. இவர்கள் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடுவார்கள். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தை 2 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்தனர்.
இதுதவிர ஆன்லைனில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தால், அதனை பார்த்து உரிமையாளர்களிடம் சென்று ஓட்டி பார்ப்பதாக கூறியும் மோட்டார் சைக்கிளை திருடி வந்துள்ளனர். கைதான 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பகுதிகளில் திருடிய 19 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.