போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x

போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் கொப்பலில் நடந்துள்ளது.

கொப்பல்:

பன்றிகளை கடத்த முயற்சி

பெங்களூரு சிக்கஜாலா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 16-ந்தேதி இவரது பண்ணைக்குள் காரில் மர்மநபர்கள் வந்துள்ளனர். அவர்கள் 90 பன்றிகளை அந்த வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

இதை பார்த்ததும் ராமகிருஷ்ணா அவர்களை தடுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பன்றி பண்ணை உரிமையாளரை தாக்கிவிட்டு சென்ற கொள்ளையர்கள் காரில் சென்ற தகவலை அறிந்ததும் போலீசார் அவர்களை பிடிக்க துரித நடவடிக்கையில் இறங்கினர்.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

மேலும் தனிப்படை அமைத்த போலீசார் கொள்ளையர்கள் கொப்பல் மாவட்டத்திலும் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா மஸ்தூர் பகுதியில் இன்று காலை பதுங்கியிருப்பது தெரியவந்தது.

உடனே நேற்று சிக்கஜாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் மகேஸ்வரப்பா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் காரில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். போலீசாரும் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று வழிமறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கி 5 பேர் ஓடினர். அவர்களை போலீஸ்காரர் பசவராஜ நாயக், இன்ஸ்பெக்டர் பிரவீன் மகேஸ்வரப்பா ஆகியோர் பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் பசவராஜநாயக்கை 5 பேரும் தாக்கிவிட்டு தப்ப முயன்றனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இதனால் இன்ஸ்பெக்டர் பிரவீன், துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்து சரண் அடைந்துவிடும்படி கூறினார். இதை பொருட்படுத்தாத கொள்ளையர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே இன்ஸ்பெக்டர் பிரவீன் மகேஸ்வரப்பா, துப்பாக்கியால் கொள்ளையர்களின் கால்களில் சுட்டார். இதில் 2 கொள்ளையர்களின் கால், தொடை பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சுருண்டு விழுந்தனர். இதையடுத்து 2 பேரையும், அவர்களது கூட்டாளிகள் 3 பேரையும் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க பட்டவர்கள் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரை சேர்ந்த சங்கர், அசோக பெல்லட்டி என்பது தெரியந்தது. மற்ற 3 பேரின் பெயர் விவரங்களை போலீசார் உடனடியாக தெரிவிக்கவில்லை.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 கொள்ளையர்கள், போலீஸ்காரர் பசவராஜ நாயக்கா ஆகியோர் கங்காவதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story