மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்தன; செஸ்காம் அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு


மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்தன; செஸ்காம் அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு
x

நெல்லுதுகேரியில் மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்தன. செஸ்காம் அதிகாரிகள் அலட்சியமே காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

குடகு;

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா நெல்லுதுகேரி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் காபி தோட்டங்களுக்கு செல்லவே தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி அந்த கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், சுமந்த், சங்கப்பா ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் புகுந்தன.

மின்சாரம் தாக்கி செத்தன

இந்த தொடர் கனமழை காரணமாக காபி தோட்டத்தில் ஒரு மரத்தின் கிளை முறிந்து அந்த வழியாக சென்ற 11 கிலோ வாட் மின்வயர் மீது விழுந்தது. இதனால் மின்வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. அப்போது அங்கு வந்த காட்டு யானைகள், அந்த மின்வயரை மிதித்ததாக தெரிகிறது.

இதனால், மின்சாரம் பாய்ந்து 2 காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இந்த தகவல் நெல்லுதுகேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு 2 காட்டு யானைகளுக்கும் அதேப்பகுதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அதேப்பகுதியில் யானைகளின் உடல்களை குழித்தோண்டி புதைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து வனத்துறையினர், கிரேன் மூலம் யானைகளின் உடல்களை லாரிகளில் ஏற்றி, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று குழித்தோண்டி புதைத்தனர்.


செஸ்காம் அதிகாரிகள் தான் காரணம்

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர் கனமழையால் காபி தோட்டத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து அங்கு சென்ற 11 கிலோ வாட் மின் வயர் மீது விழுந்துள்ளது. இதனால் மின்வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.

ஆனால் இந்த மின்வயரை சரி செய்ய செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகளின் சாவுக்கு செஸ்காம் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 12 வயது ஆண் யானையும், 13 வயது பெண் யானையும் ஆகும் என்றனர்.


Next Story