மூதாட்டியிடம் தங்கநகைகள் திருடிய 2 பெண்கள் சிக்கினர்
இந்திராலி ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் தங்கநகைகள் திருடிய 2 பெண்கள் சிக்கினர்
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் காபு தாலுகா குத்தியாரு கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் இவரது மனைவி புனித் வசந்தா ஹெக்டே (வயது69). இவர்கள் 2 பேரும் கடந்த 14-ந் தேதி மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் இந்திராலி ெரயில் நிலையத்தில் இருந்து ஏறினர். அப்போது அவர்கள் கைப்பையில் வைத்திருந்த 100 கிராம் தங்க நகைகள் காணவில்லை. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து வசந்தகுமார் மணிப்பால் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை உடுப்பி டவுனில் டைகர் சர்க்கிள் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த சுசீலா (வயது 64), லலிதா (41) என்பதும், அவர்கள் புனித் வசந்தாவிடம் தங்கநகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 100 கிராம் தங்கநகைகளை போலீசார் மீட்டனர். திருட்டு நடந்த 8 மணி நேரத்திற்குள் தங்கநகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதற்கு தம்பதியினர் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் தாவணகெரே மாவட்டம் ஹொன்னாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.