உப்பள்ளியில் வாகனம் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி


உப்பள்ளியில் வாகனம் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

உப்பள்ளியில் வாகனம் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.

உப்பள்ளி-

தார்வார் (மாவட்டம்) தாலுகா கோட்டூர் கிராமத்தை சோ்ந்தவா் நாகேஷ் (வயது 24). அதேப்பகுதியை சேர்ந்தவர் கங்காதர் (22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். மேலும் நாகேஷ், ராகேஷ் ஆகிய 2 பேர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் கோட்டூர் கிராமம் அருகே உள்ள நரேந்திர கிராமத்தில் பசுவண்ணா சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை காண நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நாகேஷ், ராகேஷ் ஆகிய 2 பேர் பசுவண்ணா சுவாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் 2 பேரும் திருவிழாவை பார்த்துவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் புனே - பெங்களூரு சாலையில் வந்தபோது, அப்போது அந்த வழியாக வந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாகேஷ், ராகேஷ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story