அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலி; ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப் பட்டது. இதற்கான அறிவிப்பை நாடாளு மன்ற செயலகம் வெளியிட்டது.
புதுடெல்லி,
ஊழல்வாதிகளான நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியைச் சேர்த்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ராகுலுக்கு 2 ஆண்டு சிறை
இதையொட்டி, குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல். ஏ.வுமான புர்னேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கில், சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் தீர்ப்பு வந்தது.
ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார்.
இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அத்துடன், குற்ற வழக்கில் மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அது நேற்று நடந்து விட்டது.
எம்.பி. பதவி பறிப்பு
சூரத் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வழக்கு எண்.18712/2019-ல், சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதன் விளைவாக கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் ராகுல் காந்தி, தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து (அதாவது மார்ச் 23-ந் தேதி) மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவை முதன்மைச்ெசயலாளர் உத்பால் குமார் சிங் பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், மக்களவை இணைச்செயலாளர் பி.சி.திரிபாதி கையெழுத்திட்டுள்ளார்.
எனவே ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து அமலுக்கு வந்து விட்டது.
மக்களவைக்கு வந்த ராகுல்
ஆனால் நேற்று மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நடந்த காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அதன் பின்னர் மக்களவைக் கூட்டத்திலும் சிறிது நேரம் கலந்து கொண்டார். பல்வேறு பிரச்சினைகளில் மக்களவையில் அமளி நிலவி சபை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி அங்கிருந்து வெளியேறினார்.
'என்ன விலையும் கொடுப்பேன்'
பதவி பறிப்பு நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் ரத்தினச்சுருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன்" என கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி கருத்து
ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டிருப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-
ஜெய்ராம் ரமேஷ்:-
இதற்கு எதிராக நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். இதில் எங்களை மிரட்டவோ, அமைதிப்படுத்தி விடவோ முடியாது. பிரதமர் தொடர்புடைய அதானி மகாமெகா ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகததின் ஆன்மா சாந்தி அடைவதாக.
ரன்தீப் சுர்ஜிவாலா:-
இன்று ஜனநாயகத்தின் கருப்பு நாள். இன்று பேச்சுரிமை மீது ஒரு கறை படிந்துள்ளது.
கே,சி.வேணுகோபால்:-
அதானி விவகாரத்தில் முதல் நாளில் இருந்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அவரது வாயை அடைக்க சதி மேற்கொள்ளப்பட்டது. அவர் பேசுவதற்கே அனுமதி இல்லை. இது பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகார அணுகுமுறையைக் காட்டுகிறது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி:-
ராகுல் காந்திக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டிருப்பதை நாடு காண்கிறது. இன்றைக்கு அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் அவர்களுக்கு (பா.ஜ.க.வுக்கு) ஆபத்து என்பதால் அவரது குரலை ஒடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு மோடி அரசும், பா.ஜ.க.வும் வந்துள்ளது.
பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார் முதல்-மந்திரி):-
ஒரு சர்வாதிகாரியின் மிகப்பெரிய பயமே, மக்கள் ஒரு நாள் தனக்கு பயப்படுவதை நிறுத்தி விடுவார்களோ என்பதுதான். பயப்படாதே என்று நாடு முழுக்க சொல்கிறவரை பயமுறுத்த நீங்கள் (பா.ஜ.க.) விரும்புகிறீர்கள். இதைத்தான் இந்திராவுக்கும் செய்தார்கள். எஞ்சியது, வரலாறு. நாங்கள் மக்கள் மன்றத்தை சந்திப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.