ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்


ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
x
தினத்தந்தி 15 Dec 2016 12:00 AM GMT (Updated: 14 Dec 2016 11:27 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பின் சார்பில் வக்கீல் ஷரவண் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப

புதுடெல்லி

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பின் சார்பில் வக்கீல் ஷரவண் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சந்தேகம் எழுகிறது

அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமானது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள், சமூகத்தில் பிரபலமானவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் சந்தேகம் எழுப்பி இருக்கின்றனர்.

அவரது மரணத்தின்போது உடன் இருந்தவர்கள் மீது பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. அவர்களது நேர்மைத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கிறது. எனவே, ஜெயலலிதா இறப்பில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது.

வீடியோ பதிவு இல்லை

ஜெயலலிதா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருடைய புகைப்படமோ வீடியோ பதிவோ எங்கும் வெளியிடப்படவில்லை. அதேபோல அவரை சந்திக்கவோ, தூரத்தில் இருந்து பார்க்கவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே, இறப்பதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை விரிவான முறையில் அறிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை

அவருடைய மரணம் குறித்து உறவினர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் எழுப்பும் சந்தேகங்களின் அடிப்படையில் அவருடைய சந்தேகத்துக்குரிய மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கடந்த செப்டம்பர் 22–ந் தேதியில் இருந்து டிசம்பர் 5–ந் தேதி வரை தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இந்த வழக்கிலும் சொத்துக்குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் வரை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி வைக்கவேண்டும். ஜெயலலிதா மற்றும் அவருடைய சகாக்களின் பினாமி சொத்துகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டின் குளிர்கால விடுமுறை காலம் (டிசம்பர் 21–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை)முடிந்த பிறகு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனு தள்ளுபடி

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் சென்னையை சேர்ந்த வக்கீல் ஆர்.ராஜவேல் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘‘ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியராக கருதக் கூடாது. அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது. இந்த வழக்குகள் ஒருவருடைய அடிப்படை உரிமையை பறிப்பதாகும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் கர்நாடகா தரப்பில் அரசு வக்கீல் அரிஸ்டாடில் ‘‘ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து இந்த மனுவை விசாரிக்க முகாந்திரம் ஏதுமில்லை’’ என்று கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story