புயல் தாக்கிய தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்கவேண்டும் டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


புயல் தாக்கிய தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்கவேண்டும் டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2016 11:30 PM GMT (Updated: 14 Dec 2016 11:29 PM GMT)

புயல் தாக்கிய தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்கவேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேல்–சபையில் எதிரொலி கடந்த 12–ந் தேதி தமிழகத்தை வார்தா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பலத

புதுடெல்லி,

புயல் தாக்கிய தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்கவேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மேல்–சபையில் எதிரொலி

கடந்த 12–ந் தேதி தமிழகத்தை வார்தா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த புயல் மழைக்கு ஏராளமானோர் பலியாகியும் விட்டனர்.

இப்பிரச்சினை டெல்லி மேல்–சபையில் நேற்று எதிரொலித்தது. குறிப்பாக தமிழக எம்.பி.க்கள் வார்தா புயலின் பாதிப்பு பற்றி தங்களுடைய குரலை வேதனையுடன் பதிவு செய்தனர்.

சிறப்பு நிதி தேவை

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேசும்போது, ‘‘வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் மாநில அரசுகள் கேட்கும் தொகையை விட குறைவாகத்தான் ஒதுக்கும். ஆனால், புயல் தொடர்பாக தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதி குறித்து மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும். தமிழகத்துக்கு தேவையான சிறப்பு நிதி பற்றி இன்றே அறிவிக்கவேண்டும். அதேநேரம் மக்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கு ஏதுவாக ஏ.டி.எம்.கள் மற்றும் வங்கிக்கிளைகள் செயல்படுவதையும் பணம் மீண்டும் நிரப்புவதையும் உறுதி செய்யவேண்டும்’’ என்று வற்புறுத்தினார்.

புயலுக்கு முன்பாகவே தேசிய பேரிடர் நிவாரண குழு மற்றும் ராணுவத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்ததை அவர் பாராட்டினார். எனினும் இதில் இன்னும் நிறைய செயலாற்றவேண்டி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனடியாக ஒதுக்கவேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களை புயல் உருக்குலைத்து விட்டது. இதில் ஏராளமானோர் பலியாகியும் விட்டனர். ஆயிரக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. தொலைத் தொடர்பு வசதிகளும் அடியோடு முடங்கி விட்டன. ஏற்கனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கையில் பணமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புயல் காரணமாக எதையும் வாங்க முடியவில்லை. எனவே பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். முதல் கட்டமாக தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,000 கோடியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய குழுவை அனுப்புங்கள்

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ‘‘இந்த புயலுக்கு இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களின் கைகளில் பணம் இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு லிட்டர் பால் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு வர்த்தக ரீதியாக ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு ஒரு குழுவை அனுப்பி முழுமையான சேத மதிப்பீடு குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரெங்கராஜன், பா.ஜனதாவின் சுப்பிரமணியசாமி எம்.பி. ஆகியோரும் தமிழகத்துக்கு நெருக்கடி மேலாண்மை குழு ஒன்றை அனுப்பி புயல் சேத மதிப்பை ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:–

தேவையானவற்றை செய்வோம்

வார்தா புயல் சென்னையையும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களையும் கடுமையாக தாக்கி சேதப்படுத்தி இருப்பது பற்றி மத்திய அரசு கவலை கொண்டு உள்ளது. இது நிச்சயமாக ஒரு நெருக்கடிதான். புயல் வருவதற்கு முன்பே மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. தேசிய பேரிடர் நிவாரண குழுவும், ராணுவமும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை மத்திய அரசு செய்யும். புயல் தாக்கிய தமிழகத்துக்கு உடனடியாக சிறப்பு நிதி அளிக்கவேண்டும் என்று இங்கே உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுடைய கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். தமிழகத்துக்கான அனைத்து தேவைகள் குறித்தும் மத்திய அரசுடன் விவாதித்து உடனடியாக முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story