செல்லாத நோட்டு அறிவிப்பை தோல்வி அடைய செய்ய காங்கிரஸ்–சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் கட்சி கூட்டு சதியா? டெலிவிஷன் சேனலின் ரகசிய படப்பிடிப்புக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு


செல்லாத நோட்டு அறிவிப்பை தோல்வி அடைய செய்ய காங்கிரஸ்–சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் கட்சி கூட்டு சதியா? டெலிவிஷன் சேனலின் ரகசிய படப்பிடிப்புக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 11:46 PM GMT (Updated: 2016-12-15T05:16:44+05:30)

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தோல்வி அடைய செய்வதற்காக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சதி செய்வதாக ஒரு டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் எடுத்து ஒளிபரப்பியதால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. ரகசிய படப்பிடிப்பு 4 நாள் விடுமுற

புதுடெல்லி

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தோல்வி அடைய செய்வதற்காக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சதி செய்வதாக ஒரு டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் எடுத்து ஒளிபரப்பியதால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

ரகசிய படப்பிடிப்பு

4 நாள் விடுமுறைக்கு பிறகு, பாராளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. மக்களவை கூடியவுடன், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி நேரத்தை தொடங்கினார்.

அப்போது, காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் குழு தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா உள்ளிட்டோர் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றபடி ஏதோ கூறினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் எம்.பி.ராஜேஷ், முகமது சலீம், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி ஆகியோர் சபையின் மையப்பகுதிக்கு செல்ல முயன்றனர்.

அவர்கள், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தோல்வி அடைய செய்ய சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சதி செய்வதாக ஒரு டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து (ஸ்டிங் ஆபரேஷன்) ஒளிபரப்பியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

மோடி வந்தார்

மேலும், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு மீதான மின்திட்ட ஊழல் புகாரையும் எழுப்பி கூச்சலிட்டனர். பா.ஜனதா உறுப்பினர் ரமா தேவி எழுப்பிய கேள்வியும், அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் அளித்த பதிலும் யாருக்கும் கேட்கவில்லை.

இதையடுத்து, சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்த அமளியின்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சபாநாயகருக்கு எதிர்ப்பு

பின்னர், சபை கூடியபோது, மல்லிகார்ஜுன கார்கே, சுதிப் பந்தோபாத்யாயா ஆகியோர் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த குமார் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘சபாநாயகருக்கு சவால் விடுவது வேதனை அளிக்கிறது. விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் தயாராக இல்லை. டெலிவிஷன் சேனலின் ரகசிய படப்பிடிப்பால், பிற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் சதி செய்யும் உண்மை வெளிவந்து விட்டது’ என்றார்.

அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டன. பின்னர் பேசிய பா.ஜனதா உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும் கமிஷன் ஏஜெண்டாக காங்கிரஸ் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் கடும் அமளி உருவானது. இதையடுத்து, சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

டெல்லி மேல்–சபை

டெல்லி மேல்–சபை நேற்று கூடியவுடன், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மீதான ஊழல் புகாரை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, கிரண் ரிஜிஜு மீதான ஊழல் புகார் பிரச்சினையை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா எழுப்ப முயன்றார். அதற்கு சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அனுமதி மறுத்தார். இதனால் எழுந்த அமளியை தொடர்ந்து, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story