கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி


கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 18 Dec 2016 7:34 AM GMT (Updated: 2016-12-18T13:04:06+05:30)

ஏழைகளின் பெயரை சொல்லி, மோடியின் அரசு பதவிக்கு வந்தது. ஆனால் இப்போது மகிழ்ச்சியற்ற மக்களுக்கு எதிராக சாவு மணி அடிக்கிறது. நாட்டின் முதல் 50 முன்னணி பணக்கார குடும்பங்களுக்கு உதவுவதற்காக இதைச் செய்கிறது. அவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான சொத்துகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் செலவில் மோடியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதை நீங்கள் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையை யார் மேம்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்தீர்களோ அந்த பிரதமர்தான் இவர்.


பெல்காலி,  

சுவிஸ் வங்கியில் பணம் குவித்தவர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசிடம் இருந்து பெற்று விட்ட பின்னரும் அதை ஏன் பிரதமர் வெளியிடவில்லை? என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

கர்நாடக மாநிலம், பெலகாவியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பிரதமர் நரேந்திர மோடியின், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை சரமாரியாக தாக்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகளின் பெயரை சொல்லி, மோடியின் அரசு பதவிக்கு வந்தது. ஆனால் இப்போது மகிழ்ச்சியற்ற மக்களுக்கு எதிராக சாவு மணி அடிக்கிறது. நாட்டின் முதல் 50 முன்னணி பணக்கார குடும்பங்களுக்கு உதவுவதற்காக இதைச் செய்கிறது.

பணக்கார குடும்பங்களுக்காக...

அவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான சொத்துகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் செலவில் மோடியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதை நீங்கள் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையை யார் மேம்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்தீர்களோ அந்த பிரதமர்தான் இவர்.

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவும் கொண்டு வந்ததாக கூறுகிற ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை என்பது மோடி உருவாக்கிய பேரழிவு.

6 சதவீதம்தான் ரொக்கம்

கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதை நிலத்திலும், தங்கத்திலும், வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்வார்களே அன்றி கையில் ரொக்கமாக வைத்திருக்க மாட்டார்கள் என்பதை பிரதமரால் உணர முடியவில்லை. கருப்பு பணத்தில் 6 சதவீதம் மட்டும்தான் ரொக்கப்பணமாக உள்ளது. மீதி 94 சதவீதமும் சுவிஸ் வங்கியிலோ அல்லது நிலத்திலோ முதலீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் மோசமான தவறை செய்த பிரதமர் மோடி 6 சதவீதத்தினரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். மீதி 94 சதவீதம் பேரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

சரமாரி கேள்விகள்

பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இங்கே கொண்டு வரப்படும்; அந்த பணத்தை கொண்டு ஏழை மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அவர் வாக்குறுதி வழங்கினார். உங்களுக்கு அந்தப் பணம் வந்ததா?

சுவிஸ் வங்கியில் பணம் குவித்தவர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசிடம் இருந்து பெற்று விட்ட பின்னரும் அதை ஏன் பிரதமர் வெளியிடவில்லை?

திருடர்கள் போன்று லண்டனில் பதுங்கியுள்ள லலித் மோடி, விஜய் மல்லையா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் மல்லையாவின் வங்கிக்கடன் ரூ.1,200 கோடியை தள்ளுபடி செய்தது ஏன்?

பண நெருக்கடியால் ஏழை தொழிலாளர்களுக்கு கூலி கிடைக்காத நிலையில், ரூபாய் நோட்டு ஒழிப்பை கருப்பு பண முதலைகள் மீதான துல்லியமான தாக்குதல் என்று எப்படி மோடி நியாயப்படுத்த முடியும்?

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story