வருமான வரி இலாகா, அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.100 கோடியை உடனடியாக புழக்கத்தில் விட நடவடிக்கை மத்திய அரசு முடிவு


வருமான வரி இலாகா, அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.100 கோடியை உடனடியாக புழக்கத்தில் விட நடவடிக்கை மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 21 Dec 2016 12:15 AM GMT (Updated: 2016-12-21T03:11:48+05:30)

வருமான வரி இலாகா மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றிய ரூ.100 கோடியை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

புதுடெல்லி,

வருமான வரி இலாகா மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றிய ரூ.100 கோடியை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

பணம்-நகை பறிமுதல்

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் தொழில் அதிபர்கள், கல்வி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரி இலாகாவினரும், அமலாக்கத் துறையினரும் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத பணம், நகை, சொத்துகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை நாடு முழுவதும் ரொக்க பணமாக புதிய ரூ.500, ரூ2,000 நோட்டுகள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் ரூ.60 கோடிக்கு இந்த வகை ரொக்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்கு பாதுகாப்பு

பொதுவாக வருமான வரி இலாகாவினரும், அமலாக்கத் துறையினரும் தாங்கள் கைப்பற்றிய பணத்தை தங்களது பெட்டக அறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட நபர் மீதான வழக்கு முடியும் வரை இந்த பணம் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கும்.

வழக்கு முடிந்த பிறகு பறிமுதல் செய்த பணத்தை மத்திய தொகுப்பு நிதியில் டெபாசிட் செய்வார்கள். சில வழக்குகளில் விசாரணை பல வருடங்கள் நீண்டு கொண்டே போகும் என்பதால் வருமான வரி இலாகாவினர் அந்த பணத்தை தங்களுடைய பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருப்பார்கள்.

புழக்கத்தில் விட முடிவு

தற்போது சிக்கிய ரூ.100 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் உடனடியாக புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தனது மண்டல அலுவலகங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதில், பறிமுதல் செய்த அனைத்து புதிய ரூபாய் ரூ.500, ரூ.2,000 நோட்டுகளையும் உடனடியாக ஒரு வங்கி கணக்கை தொடங்கி அதில் டெபாசிட் செய்யவேண்டும். இதன் மூலம் உடனடியாக இந்த பணத்தை புழக்கத்தில் விட முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

வங்கிகளில் டெபாசிட்

இதுபற்றி அமலாக்கத் துறை இயக்குனர் கர்னால் சிங் கூறுகையில், “பறிமுதல் செய்த பணத்தை எங்களுடைய மண்டல பிரிவு அலுவலகங்களில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைத்திருக்கும்படி முன்பு அறிவுறுத்தி இருந்தோம். தற்போது இந்த பணத்தை வங்கிகளில் எங்களது கணக்கில் டெபாசிட் செய்யும்படி கேட்டுக்கொண்டு உள்ளோம். இந்த பணம் உடனடியாக புழக்கத்திற்கு வரும். இதனால் பொதுமக்களின் சிரமம் குறைக்கப்படும்” என்றார்.

இதேபோல் வருமான வரி இலாகாவையும் பறிமுதல் செய்த புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

பறிமுதல் செய்த இந்த ரூ.100 கோடி புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதன் மூலம், நாட்டில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்கள் தலா ரூ.10 ஆயிரம் என்னும் அளவிற்கு பணத்தை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,000 நோட்டு அச்சிடப்படாது

இதற்கிடையே கடந்த மாதம் 10-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது போல் மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏற்கனவே அச்சிட்ட புதிய ரூ.500, ரூ2,000 நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில் எடுப்பதற்கு ஏற்ப எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு விட்டன. இதுபோன்ற நிலையில் புதிய ரூ1,000 நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டால் அவற்றையும் ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு ஏற்ப அதன் எந்திரங்களை வடிவமைக்கவேண்டி வரும். இதற்கு மேலும் சில வாரங்கள் ஆகும். தவிர, தற்போதுள்ள நடைமுறைக்கு இது இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே புதிய ரூ.1,000 நோட்டுகளை வெளியிடுவது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா காந்தி கோஷ் கூறுகையில், ரூ.1,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டால், ரூ1,000 மற்றும் ரூ.2,000 ஆகிய நோட்டுகளுக்கு இடையேயான பண மதிப்பீட்டு விகிதாச்சாரம் 50-க்கு 50 என்ற வகையில் அமையவேண்டும். அப்போதுதான் சரியான புழக்கத்தை உறுதி செய்ய முடியும் என்றார்.

இதனால் ரூ.1,000 நோட்டை மத்திய அரசு வெளியிடுமா என்பது கேள்விக்குறிதான்.

இயல்பு நிலை எப்போது திரும்பும்?

ஏ.டி.எம்.களில் பணத்தை எடுப்பது எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? என்று பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறும்போது, “தற்போது தினமும் ஏ.டிஎம்.களில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணம் வைக்கப்படுகிறது. இந்த தொகை பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது. அதுமட்டுமின்றி தினமும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏ.டி.எம்.களில்தான் பணம் நிரப்பப்படுகிறது. எனவே நிலைமை சீரடைய இன்னும் சிறிது காலம் ஆகும்” என்றார். 

Next Story