நாடு முழுவதும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரிலேயே வருமானவரி சோதனை


நாடு முழுவதும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரிலேயே வருமானவரி சோதனை
x
தினத்தந்தி 24 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-25T02:33:12+05:30)

நாடு முழுவதும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரிலேயே வருமானவரி துறையினர் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரிலேயே வருமானவரி துறையினர் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்கு புகார்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் வருமான வரித்துறை சோதனை சற்று அதிக அளவில் நடைபெறுகிறது.

கருப்பு பணம் பதுக்கி இருப்பவர்கள் குறித்து நாடு முழுவதும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரிலேயே இந்த சோதனைகள் நடைபெறுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி 600 பேர் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த தகவல்கள் உடனடியாக வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

வருமான வரித்துறையின் 80 சதவீத சோதனைகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரிலேயே நடத்தப்படுவதாக வருமானவரித்துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.

ரூ.40 லட்சம் புதிய நோட்டுகள்

கேரளாவில் உள்ள திருர் பஸ் நிலையத்தில் ரூ.3 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் சவுக்கத் அலி (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே ஹவாலா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர். இவரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கூறிய சபீர்பாபு என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல் தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் இருந்து ரூ.36 லட்சத்து 98 ஆயிரம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோடிக்கணக்கில் பறிமுதல்

டெல்லியில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி ரூ.34 கோடியை டெபாசிட் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் தங்க கட்டி விற்பனையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.44 கோடியே 74 லட்சம் சிக்கியது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வெளிநாட்டு பணத்தை மாற்றித்தரும் ஏஜென்டு அலுவலகத்தில் இருந்து ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த சோதனையில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் பழைய நோட்டுகளை கமிஷனுக்கு மாற்றிக்கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.27 லட்சத்து 62 ஆயிரம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ.2 கோடியே 60 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.12 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும். மேலும் 95 கிலோ தங்கமும் சிக்கியது. 

Next Story