திருப்பூரில் ரூ.36 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுக்கள் சிக்கியது; விசாரணை தீவிரம்


திருப்பூரில் ரூ.36 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுக்கள் சிக்கியது; விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 27 Dec 2016 7:59 AM GMT (Updated: 2016-12-27T13:29:08+05:30)

நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் ரூ.36.10 லட்சம் நோட்டுகள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர்,

திருப்பூரில் வாகன சோதனையின் போது ரூ.36 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுக்கள் சிக்கியது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் பிரிவு ரோட்டில் போலீசார் காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர், காருக்கு முன்னாலும், பின்னாலும் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்தன. காரை சோதனை செய்தபோது ஒரு பையில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. பையில் மொத்தம் ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் வந்த 4 பேரிடமும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடமும் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடனே ரூ.36.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளையும், கார் - மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரும் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பிடிபட்ட ரூ.36.10 லட்சம் புதிய நோட்டுகள் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் புதிய ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்டவர்கள் இளையராஜா, சுப்புராஜ், ஸ்டில் சிகர்அலி,  சுகில் அகமது, அசாருதீன் அலி, ஆரூண் ரசீத் என்றும் 6 பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் பெருமாநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்று கொண்டு கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க சென்ற போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். 

நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் ரூ.36.10 லட்சம் நோட்டுகள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், அவர்களின் விசாரணைக்கு பிறகே இதில் யார் - யார்? சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவரும்.

Next Story