மணிப்பூரில் இரோம் ஷர்மிளா வீதிவீதியாக சைக்கிளில் பிரச்சாரம்


மணிப்பூரில்  இரோம் ஷர்மிளா வீதிவீதியாக சைக்கிளில்  பிரச்சாரம்
x
தினத்தந்தி 30 Dec 2016 9:37 AM GMT (Updated: 2016-12-30T15:07:52+05:30)

16 ஆண்டுகால தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் முடித்துக்கொண்ட இரோம் ஷர்மிளா, தற்போது அங்கு வீதிவிதியாக சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

 மணிப்பூர்,

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் ஷர்மிளா  2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 200-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடினார்.

உண்ணாவிரதம் தொடங்கிய 3-வது நாளில் மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். இதையடுத்து  அவரை கைது செய்த போலீசார்  பலவந்தமாக சிகிச்சை அளித்தனர்.இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்னா விரதத்தை  முடித்துக்கொள்ள திட்டமிட்டு கடந்த ஆகஸ்டில் இரோம் ஷர்மிளா உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

இதன்பின்னர்,  மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். வர உள்ள மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக, இரோம் ஷர்மிளா தெரிவித்து இருந்தார். 

இதன்படி தற்போது சைக்கிளில் வீதிவிதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இம்பால் பள்ளத்தாக்கு பகுதி மக்களிடம் தனது கட்சிக்கு ஆதரவை திரட்டி வருகிறார்.

தனது சைக்கிள் சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோம் ஷர்மிளா,  மணிப்பூரின் அடுத்த முதல் மந்திரியாக நான் ஆக விரும்பினால், இங்குள்ள இடங்களையும் மக்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் நான் சைக்கிளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறேன். பொது இடங்களில் மக்களை சந்திக்கும் ஐரோம் ஷர்மிளா  மணிப்பூர் மாநிலம் குறித்த தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசி வருகிறார். 

Next Story