வினாத்தாள் வெளியானதால் ராணுவ தேர்வு ரத்து அதிகாரிகள் உள்பட 18 பேர் கைது


வினாத்தாள் வெளியானதால் ராணுவ தேர்வு ரத்து அதிகாரிகள் உள்பட 18 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2017 11:30 PM GMT (Updated: 26 Feb 2017 8:02 PM GMT)

நாடு முழுவதும் நேற்று நடந்த ராணுவ தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது.

புதுடெல்லி

நாடு முழுவதும் நேற்று நடந்த ராணுவ தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. இதையொட்டி 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். 350 மாணவர்களும் சிக்கினர்.

வினாத்தாள் வெளியானது

ராணுவத்தில் சேருவதற்காக கிளார்க், டிரேட்ஸ்மேன், ஸ்ட்ராங்மேன் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நாடு முழுவதும் உள்ள 52 மையங்களில் நடந்தது. ராணுவ பணி நியமன வாரியம் இந்த தேர்வை நடத்தியது.

இந்த தேர்வில் முறைகேடு நடைபெறலாம் என்று சந்தேகித்ததால் போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும் தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும்படி ஏற்கனவே ராணுவம் கேட்டுக் கொண்டு இருந்தது. இதனால் போலீசாரும், புலனாய்வு துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, ராணுவ தேர்வுக்கான வினாத்தாள் மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களில் முன்கூட்டியே வெளியானது. இதுதொடர்பாக தானே குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

18 பேர் கைது

அப்போது ராணுவ தேர்வுக்கான வினாத்தாள்களையும், அதற்கான விடைகள் எழுதப்பட்ட தாள்களையும் அவர்கள் கைப்பற்றினர். சில இடங்களில் வினாத்தாள்களின் நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, துணை ராணுவ அதிகாரி மற்றும் 3 இடைத் தரகர்கள் உள்பட 18 பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் வினாத்தாள்களை வைத்திருந்ததாக 350 மாணவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் கம்ப்டீ, நாக்பூர், அகமத்நகர், ஆமதாபாத், கோவா மற்றும் கிர்க்கி ஆகிய 6 மையங்களில் நடந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். வேறு எந்த தேர்வு மைய பகுதியில் வினாத்தாள் வெளியாகி இருப்பது தெரிய வந்தாலும் அங்கு நடத்தப்பட்ட தேர்வும் ரத்து செய்யப்படும்’’ என்றார்.

உயர் அதிகாரிகள் உடந்தை?

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது எப்படி என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது.

போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் சிலவற்றில் ராணுவ தேர்வுக்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான விடைகளை ராணுவ வீரர்கள் சிலர் விடுதிகளில் அறை எடுத்தும், தனி இடங்களில் தங்கியிருந்தும் எழுதி மாணவர்களுக்கு கொடுத்து உள்ளனர். கேள்வித்தாளை அச்சிட்ட அச்சகத்தின் வழியாகவும் அது வெளியாகி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

வினாத்தாள் வெளியானதில் ராணுவ உயர் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story