தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு  சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 27 Feb 2017 9:15 PM GMT (Updated: 27 Feb 2017 8:47 PM GMT)

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மக்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகும் அந்த கடை மூடப்படாததால் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் வழக்கு

அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வைகோவின் சகோதரரும், கலிங்கப்பட்டி ஊராட்சி தலைவருமான வை.ரவிச்சந்திரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஊராட்சி தீர்மானத்தை நிராகரித்த கலெக்டரின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடைவிதித்தனர்.

மேலும், “கிராம மக்களின் நலன் குறித்து ஊராட்சி நிர்வாகமே நன்கு அறியும். கலிங்கப்பட்டியில் மதுக்கடை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் தீர்மானத்தை ரத்து செய்து நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் மக்களின் உடல்நலன், சமுதாய ஒழுங்கு போன்றவற்றுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், எனவே கலிங்கப்பட்டி மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஊராட்சி மன்றத்துக்கு அதிகாரம்

மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, தமிழக அரசு வக்கீல் பி.பாலாஜி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

விசாரணை தொடங்கியதும், டாஸ்மாக் கடையை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்க ஊராட்சி மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், மதுவை விலக்கி வைக்க முடிவு செய்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், டாஸ்மாக் கடையை திறப்பதற்காக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது சரி அல்ல என்றும் கூறினார்கள்.

தமிழக அரசின் மனு தள்ளுபடி

எனவே, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட ஊராட்சி மன்றம் எடுத்த முடிவு சரியே என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story