ரூ.51 கோடி பணபரிமாற்றம் செய்த வழக்கில் பிரபல டெல்லி தொழில் அதிபர் கைது


ரூ.51 கோடி பணபரிமாற்றம் செய்த வழக்கில் பிரபல டெல்லி தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2017 10:48 PM GMT (Updated: 6 Jun 2017 10:48 PM GMT)

டெல்லியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் யோகேஷ் மிட்டலின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நவம்பர் 14–ந்தேதி முதல் 19–ந்தேதி முடிய போலியான நிறுவனங்கள் பெயரில் பல்வேறு வங்கிக்கணக்குகளில்  ரூ.51 கோடியை டெபாசிட் செய்து பின்னர் அந்த பணத்தை வங்கி அதிகாரிகளின் உதவியுடன் திரும்ப எடுத்ததாக டெல்லியைச் சேர்ந்த பிரபல வக்கீல் ரோகித் தாண்டன் உள்ளிட்ட 3 பேரை மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த மோசடியில் கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக கடந்த 30–ந்தேதி டெல்லியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் யோகேஷ் மிட்டலின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது. அப்போது வங்கியில் செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்த மோசடியில் யோகேஷ் மிட்டலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

பின்னர் டெல்லி செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டனர். இதையடுத்து, யோகேஷ் மிட்டலை 3 நாட்கள் அமலாக்கத்துறை தங்களின் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. 

Next Story