ஜூலை 17-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு


ஜூலை 17-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 12:30 AM GMT (Updated: 7 Jun 2017 11:07 PM GMT)

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை பெறுபவர் ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தல்

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு முன்னதாக, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வந்தது.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஜூலை 17-ந் தேதி

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்த தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, தேர்தல் அட்டவணையையும் வெளியிட்டார்.

அதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ந் தேதி நடைபெறுகிறது.

14-ந் தேதி வேட்புமனு தாக்கல்

இதற்கான அறிவிக்கை வருகிற 14-ந் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 28-ந் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 29-ந் தேதி நடைபெறும்.

ஓட்டு எண்ணிக்கை

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 1-ந் தேதி கடைசி நாள்.

ஜூலை 17-ந் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஜூலை 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது புதிய ஜனாதிபதி யார்? என்பது தெரிந்துவிடும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

மக்களவை, மேல்- சபை என பாராளுமன்ற இரு சபைகளிலும் உள்ள எம்.பி.க்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளின் உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி. போடும் ஓட்டின் மதிப்பு 708. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. எந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யானாலும் அவருடைய ஓட்டின் மதிப்பு 708 தான்.

ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு 208. தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு 176.

சட்டசபையில் வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும், அந்தந்த மாநில சட்டசபைகளிலும் நடைபெறும். பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு ஓட்டுப் போடுவார்கள்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பெயரை 50 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 50 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர் ரூ.15 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். 

Next Story