மும்பை விமான நிலையத்தில் ரூ.21 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டு பெண் கைது


மும்பை விமான நிலையத்தில் ரூ.21 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டு பெண் கைது
x
தினத்தந்தி 9 Jun 2017 11:27 PM GMT (Updated: 9 Jun 2017 11:27 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் ரூ.21 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை எத்தியோப்பியாவில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை பெண் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அவர் கொண்டு வந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே பாக்கெட்டுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த வெள்ளை நிற பொடியை கைப்பற்றினர்.

அந்த பொடியை சோதனை செய்தபோது அது ‘ஹெராயின்’ என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. அந்த போதைப்பொருள் 3 கிலோ 500 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண் பயணியை கைது செய்தனர்.

விசாரணை

விசாரணையில், அவர் பொலிவியா நாட்டை சேர்ந்த மால்கேர்ஜி கிளாவுதியா (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

அந்த போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக அவர் கடத்தி வந்தார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Next Story