ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு


ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 11:45 PM GMT (Updated: 9 Jun 2017 11:34 PM GMT)

ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுபோல், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி, யுனானி ஆகியவை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த மத்திய அரசு விரும்பியது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளின் ஆயுஷ் துறைகளுக்கும் கடிதம் எழுதியது. பெரும்பாலான மாநிலங்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தன. 

அமல்படுத்த முடிவு

இதையடுத்து, அடுத்த ஆண்டில் இருந்து, நாடு முழுவதும் இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அமல்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஏற்று செயல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு அந்த கவுன்சில் எழுதிய கடிதத்தில், ‘ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கு திறமையான மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த ஆண்டில் இருந்து, இந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் நடத்தி வந்த நுழைவுத்தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அனைத்து இளநிலை படிப்பு இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசுகளால் நிரப்பப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அடுத்த ஆண்டில் இருந்து இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீடு கிடையாது

மேலும், ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அப்படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசால் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்படுவதற்கு சுயநிதி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story