வன்முறை சம்பவங்கள் ஓய்ந்ததால் மத்திய பிரதேச முதல்–மந்திரி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்


வன்முறை சம்பவங்கள் ஓய்ந்ததால் மத்திய பிரதேச முதல்–மந்திரி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்
x
தினத்தந்தி 11 Jun 2017 11:15 PM GMT (Updated: 11 Jun 2017 8:28 PM GMT)

மத்திய பிரதேசத்தில் வன்முறை ஓய்ந்ததால் முதல்–மந்திரி சிவராஜ் சவுகான் நேற்று தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

போபால்,

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை எதுவும் கைகொடுக்கவில்லை.

முதல்–மந்திரி உண்ணாவிரதம்

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநிலத்தில் அமைதி ஏற்படும் வரை தான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் போபால் நகரில் பி.எச்.இ.எல் நிறுவனத்தின் தசரா மைதானத்தில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

அப்போது அவர் தன்னை விவசாயிகள் இங்கு வந்து பார்க்கலாம் என்றும் எனது பணிகளை (முதல்–மந்திரி பணி) இங்கு இருந்து தான் கவனிப்பேன் என்றும் அறிவித்தார்.

முதல்–மந்திரியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேலி செய்தனர். இது முதல்–மந்திரியின் நாடகம் என வசை பாடினார்கள்.

வாபஸ் பெற்றார்

முதல்–மந்திரியின் உண்ணாவிரதம் இருந்ததால் மாநிலத்தில் அமைதி திரும்ப தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் மாநிலத்தில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. முதல்–மந்திரியின் உண்ணாவிரதத்துக்கு பலன் கிடைத்தது போல் மாநிலத்தில் வன்முறை ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டார். உண்ணாவிரத பந்தலில் அவருக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா இனிப்பு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

சமூக ஆர்வலர் மேதாபட்கர் கைது

இதற்கிடையே போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க மண்ட்சார் மாவட்டத்துக்கு சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திரா யாதவ், சமூக ஆர்வலர் மேதாபட்கர் சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட 30 பேர் நேற்று அங்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அவர்களை டோகர் டோல்கேட் அருகே தடுத்து நிறுத்தினார்கள்.

அவர்களிடம் போலீசார் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்றனர். அவர்கள் தொடர்ந்து செல்ல முயன்றதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story