ஜனாதிபதி தேர்தல், பிற கட்சிகளிடம் பேச சிறப்பு குழுவை பா.ஜனதா அமைத்தது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளிடம் பேச உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய குழுவை பா.ஜனதா அமைத்து உள்ளது.
புதுடெல்லி,
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே அதற்கு முன்னதாக, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வந்தது. ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு அடங்கிய சிறப்பு குழுவை பா.ஜனதா தலைவர் அமித் ஷா அமைத்து உள்ளார்.
இந்த குழுவானது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என ஆலோசனை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக அமித்ஷா அருணாச்சல பிரதேசம் பயணத்தை ரத்து செய்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை ஜூலை 15- 16-ம் தேதிகளில் கூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி தேர்தல் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளது எனவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. பாரதீய ஜனதா தன்னுடைய வேட்பாளரை விரைவில் தேர்வு செய்யும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்.
Related Tags :
Next Story