முத்தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்


முத்தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 12 Jun 2017 9:57 AM GMT (Updated: 12 Jun 2017 9:56 AM GMT)

முத்தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்தவருக்கு பஞ்சாயத்து ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.


சம்பல், 



இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ‘முத்தலாக்’ விவாகரத்து நடைமுறைக்கு எதிரான வழக்குகளில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

இதற்கிடையே முத்தலாக் முறையானது ஒழிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முத்தலாக் முறை விவாதப்பொருளாகி உள்ளநிலையில் காரணமின்றி உடனடியாக தலாக் சொல்லும் முறைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியின் ராய்சாதி பகுதியில் 45 வயது ஆணுக்கும், 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்து உள்ளது. திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. சண்டையையும் நடந்து உள்ளது. இதனையடுத்து கணவர், மனைவிக்கு தலாக் கூறி அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தை நாடிஉள்ளனர். துர்க் பஞ்சாயத்திடம் முறையிட்டு உள்ளனர். பஞ்சாயத்து அங்குள்ள மதர்ஸாவில் நடந்து உள்ளது. சுமார் 52 கிராமங்களை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்தில் கலந்துக் கொண்டு உள்ளனர்.

 இருதரப்பு விசாரணையை அடுத்து பஞ்சாயத்து மணமகனுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்ததது. 

இதுதொடர்பாக துர்க் பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர் ஷாகித் ஹுசைன் பிடிஐக்கு அளித்து உள்ள பேட்டியில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தை அணுகினார்கள். உடனடியாக தலாக் கூறும் நடவடிக்கை எதிராக பஞ்சாயத்து நேற்று கடினமான ஒரு நடவடிக்கையை எடுத்தது. எந்தஒரு எதிர்ப்பும் இன்றி மணமகனுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, அவரும் உடனடியாக பணத்தை கொடுத்துவிட்டார்,” என்றார். பஞ்சாயத்து பெண்ணின் பெற்றொரிடம் இருந்து வரதட்சணையாக பெற்ற பொருட்களையும் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதற்கான வசதியையும் செய்து கொடுத்தது. 

பெண்ணிற்கு ரூ. 60 ஆயிரத்தை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது பஞ்சாயத்து. விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு முன்னதாக உள்ளநிலையில் பஞ்சாயத்து இத்தகைய உத்தரவை பிறப்பித்து உள்ளது. உடனடியாக தலாக் கூறி விவகாரத்து செய்யும் சூழ்நிலையை அனுமதிக்க கூடாது என எங்களுடைய சமூதாயம் முடிவு செய்து உள்ளது என ஷாகி ஹுசைன் கூறிஉள்ளார்.  எந்தஒரு பிரச்சனையும் உடனடியாக முடிவு எடுக்கப்படாது. விசாரித்தே முடிவு எடுக்கப்படும். பிரச்சனையை தீர்த்து இணைந்து வாழவும் நடவடிக்கை எடுப்போம். 

உடனடியாக தலாக் கூறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முத்தலாக் மற்றும் வரதட்சணை விவகாரத்தில் எங்களுடைய உத்தரவை ஏற்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹுசனை கூறிஉள்ளார். 

தெராய் பகுதியில் வாழும் துர்க் சமூதாயத்தினரின் பஞ்சாயத்து முத்தலாக் கூறி உடனடியாக விவகாரத்து செய்யும் முறைக்கு தடை விதித்து உள்ளது. ஏற்கனவே பஞ்சாயத்து வரதட்சணைக்கு தடை விதித்து உள்ளது. திருமணங்களில் ஆடம்பர செலவு மற்றும் விழா காலங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களை பயன்படுத்தவும் தடை விதித்து உள்ளது.

Next Story