ஜார்கண்டில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஒருவர் அடித்துக்கொலை


ஜார்கண்டில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஒருவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 1 July 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்டில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி

ஜார்கண்டில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், பசு தொடர்பான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் அவர் கண்டனம் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே ஜார்கண்டில் மாட்டிறைச்சி தொடர்பாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டு உள்ளார். அங்குள்ள ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலிமுதீன் என்பவர் ராம்கர் மாவட்டம் வழியாக தனது வேனில் சென்று கொண்டிருந்தார்.

பஜார்தந்த் என்ற பகுதியில் சென்றபோது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வேனை வழிமறித்து நிறுத்தியது. அவரது வேனில் மாட்டிறைச்சி இருக்கலாம் என்று சந்தேகமடைந்த அந்த கும்பல், அலிமுதீனை வலுக்கட்டாயமாக வேனில் இருந்து இறக்கி கொடூரமாக தாக்கியது. மேலும் அவரது வேனுக்கும் தீ வைத்தது.

இந்த கொடூர தாக்குதலில் அலிமுதீன் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ராம்கர் போலீசார் அந்த கும்பலை விலக்கிவிட்டு, படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அலிமுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராம்கர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த கொலையை காட்டுமிராண்டித்தமான செயல் என வர்ணித்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் இத்தகைய செயல்களுக்காக மோடி அரசை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்று கூறிய வெங்கையா நாயுடு, காங்கிரஸ் ஆட்சியின் போதும் இதுபோன்ற இனவாத தாக்குதல்கள் நடைபெற்று இருப்பதாக தெரிவித்தார். மிகவும் பழமையான அந்த கட்சியால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்த முடியாதது ஏன்? என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story